L2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து வீசும் பி.எஸ்.என். நிகர்நிலைப் பல்கலைக்கழகம்!

மேலத்திடியூர் பகுதியை பசுமை வளம் மிக்க பகுதியாக மாற்றும் முயற்சி – தத்தெடுத்த 5 கிராமங்களிலும் மரங்களை வளர்க்க திட்டம்

நெல்லை, அக். 6:

திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என். கல்லூரி, தென் தமிழகத்தில் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பிடம் பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்ந்துள்ள பி.எஸ்.என். பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பல்கலைக்கழக மாணவ-மாணவிகளை ஈடுபடுத்தி விதைப்பந்துகள் தயாரித்து, அவற்றை உரிய இடங்களில் வீசி மரக்கன்றுகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முதல்வர் கார்லின் கெலாப் தலைமை வகித்தார். சக்தி முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விதைப்பந்து பிரச்சாரகரும் சமூகநல ஆர்வலருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறனை, உள்தர உறுதிப்பாட்டு அலகின் ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியையுமான முனைவர் ஜோசபின் சுதா அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி

நிகழ்ச்சியில் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், மாணவ-மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிக்கும் முறை, அதன் மூலம் கிடைக்கும் சுற்றுச்சூழல் நன்மைகள், விதைப்பந்துகளை வீசுவதன் மூலம் இயற்கையாக மரங்கள் உருவாகும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

விதைப்பந்துகள் மூலம் வறண்ட மற்றும் மரங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் பசுமையை அதிகரிக்க முடியும் என்றும், மழைநீர் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க மரவளர்ப்பு முக்கியமானது என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

5 கிராமங்களை பசுமையாக்கும் திட்டம்

பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ள 5 கிராமங்களை மரங்களால் அலங்கரிக்கும் வகையில் பசுமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக 2 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து, அவற்றை தேவையான இடங்களை தேர்வு செய்து வீசி, மேலத்திடியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பசுமை வளம் மிக்க பகுதிகளாக மாற்றுவதற்கு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் மாணவ-மாணவிகளை பெருமளவில் ஈடுபடுத்தி, அவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடும் திட்டம்

விதைப்பந்துகள் தயாரித்த பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள சான்றிதழ்கள் தொடர்பாக பல்கலைக்கழக இயக்குனர் செல்வகுமாரிடம் திருமாறன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், விதைப்பந்துகள் வீசும் நிகழ்வுடன் இணைந்து ஆயிரக்கணக்கான பனை விதைகளை நடும் திட்டத்தையும் செயல்படுத்தலாம் என இயக்குனர் செல்வகுமார் முன்மொழிந்தார். இந்தத் திட்டமும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியின் நிறைவில் இயற்பியல் பேராசிரியை முனைவர் சிவசக்தி ராணி நன்றி கூறினார்.

பேராசிரியைகளுக்கு ‘பசுமைப் போராளி’ விருது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் பணிகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் பேராசிரியைகள் முனைவர் ஜோசபின் சுதா மற்றும் முனைவர் சிவசக்தி ராணி ஆகியோருக்கு நிகழ்ச்சியில் ‘பசுமைப் போராளி விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பசுமை முயற்சிக்கு தலைவர் மற்றும் கல்வியாளரான பி. சுயம்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாணவர்களின் பங்களிப்புடன் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை திட்டமிட்ட பகுதிகளில் விதைக்கப்பட்டால் மேலத்திடியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுமைப் பரப்பு அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் வளமான இயற்கைச் சூழலை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.