மதுரை: மதுரையில் மர்மமாக இறந்த மாணவன் அடித்துக்கொ* செய்யப்பட்டது அம்பலாகி உள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த மாணவனின் தாயார், மற்றொரு மாணவரிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை கூடல்நகரை சேர்ந்த யோகலெட்சுமி – கருப்பசாமி தம்பதியினரின் மகன் தமிழ்செல்வன் (16). 11ம் வகுப்பு படித்தார். கடந்த செப். 6, ஞாயிறு விடுமுறையன்று கிரிக்கெட் விளையாட சென்ற மாணவர் தமிழ்செல்வனை, மதுரை ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே முட்புதர் பகுதியில் மறுநாள் காயங்களுடன் போலீசார் சடலமாக மீட்டனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கும் நிலையில், மாணவர் உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒரு மாணவியுடன் நட்பு முறையில் பேசியதால், மாணவி தரப்பினர் ஆணவக் கொ* செய்திருக்கலாம் என தமிழ்செல்வன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவர் மார்பில் காயத்துடன், கால்களில் சிராய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. மாணவன் மரணத்தை கொ* வழக்காக மாற்றக்கோரி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்நிலையில் தமிழ்செல்வனின் தாய் யோகலட்சுமியிடம், மாணவர் ஒருவர் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவன்: இன்னும் தம்பிய தரலையாம்மா…?
யோகலெட்சுமி: ஜிஹெச்லதான் தம்பிய வெச்சிருக்கோம். யாரும் அடிச்சுப் போட்டுருப்பாங்களோன்னு எங்களுக்கு சந்தேகமாக இருக்கு.
மாணவன்: நானும் நேத்து போலீஸ் ஸ்டேஷன்தான் போயிட்டு வந்தேன். கூடப் போனாங்கள்ல 6 பேரும் சொல்றாங்க… மேட்டுத்தெருகாரனுங்கதான் அடிச்சிருக்காங்களாம். அங்கே 2 அண்ணனுங்க சரக்கு அடிச்சிட்டு வந்தாங்களாம். தமிழ்செல்வன் எலுமிச்சம்பழம், நெல்லிக்காய் எல்லாம் வச்சிருந்தானாம். மீன் பிடிக்கிறபோது, ரெண்டு பேரும் கேட்டிருக்காங்க, இவன் தரமுடியாதுன்னு சொல்லியிருப்பான்போல, அடிச்சிருப்பாங்க போல, அப்போ 2 பேரும் தண்ணியில தூக்கிப் போட்டிருக்காங்க. இத அர்ஜூனும் மத்தவங்களும் பார்த்து ஓடி வந்திருக்காங்க…
யோகலெட்சுமி: 2 பேரும் குடிச்சிட்டு இவனை தண்ணியில வச்சு அமுக்கி இருக்காங்களா? எம் மகன் ஏதும் வம்பிழுத்தானா? ஐயோ அந்த பசங்க யாருன்னு தெரியுமா தம்பி?
மாணவன்: போலீஸ் செக்கப் செய்யப்போறோம்ன்னு சொல்லி இருக்காங்க, பனியன், செப்பல் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்கானுங்கம்மா…
யோகலெட்சுமி: சட்டையை கழட்டி அடிச்சிருக்காங்களா? ஐயோ கடவுளே, வெளியே போவாதடான்னு சொன்னேனே… கேட்கலியே, அந்த பசங்க எதுக்குத் தம்பி இவனை அடிக்கணும் இவன் யாரோட வம்புக்கும் போகமாட்டானே தம்பி, எதுக்கு அடிச்சாங்களாம் தம்பி.
மாணவன்: அம்மா நான் சொல்றத கேளுங்க, போலீஸ்ல நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க. நானே தெரியாமத்தான் உங்ககிட்ட உண்மையை சொல்றேன்.
யோகலெட்சுமி: அவங்க கண்டு பிடிக்கலயே, கண்ணீரெல்லாம் வத்திப்போச்சே, என் மகனை அடிச்சே கொன்னுட்டானுங்களே?’ இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது.
மாணவர் தமிழ்செல்வனை தண்ணீருக்குள் மூழ்கடித்து கொ* செய்திருப்பதாகவும், இதனைக் கண்டதாக கூறும் மாணவர்களிடம் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் சந்தேக வழக்குப்பதிவின் பேரிலேயே இவ்வழக்கை போலீஸ் முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தமிழ்செல்வனி்ன் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். போலீசார் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






