வரதட்சணை கொடுமை வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்த பத்து வழிகாட்டு நெறிமுறை: உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது

புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் தொடர்பான வரதட்சணை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளை விரைந்து கையாளுவது குறித்து பத்து வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரதட்சணைக் கொலை மற்றும் மனைவிக்கு எதிரான கொடுமை பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்கள், இயன்றவரை, அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் அல்லது சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள அத்தகைய வழக்குகளை அடையாளம் கண்டு, அவற்றின் விசாரணை முன்னேற்ற நிலவரத்தை மாவட்ட நீதித்துறைகள் கண்காணிக்க வேண்டும். விசாரணை நீதிமன்றங்கள், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 90 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நியாயமான கால வரம்புக்குள் சாட்சியப் பதிவுகள் தொடங்க வேண்டும், அவை தொடர்ச்சியாகவோ அல்லது தினசரி அடிப்படையிலோ பதிவு செய்யப்பட வேண்டும். தேவையற்ற காரணிகளுக்காக வழக்கை ஒத்திவைக்க கோருவதை நீதிமன்றங்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. மேலும் ஒத்திவைக்கும் போதெல்லாம் அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் போதுமான காரணமின்றி தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருக்கும் பட்சத்தில், சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் முக்கிய சாட்சிகளை விசாரிப்பதற்காக கால அட்டவணைகளை விசாரணை நீதிமன்றம் தயாரிக்க வேண்டும். மேலும், வழக்கில் உரிய நேரத்தில் சம்மன்கள் வழங்கப்படுவதையும், சாட்சிகள் ஆஜர்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

வரதட்சணை தொடர்பான பழைய குற்றவியல் மேல்முறையீடுகள், சீராய்வு மனுக்கள், பிணை தொடர்பான வழக்குகளின் விசாரணை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவற்றை உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அனுபவம் வாய்ந்த அரசு வழக்கறிஞர்களை இதுபோன்ற வழக்குகளைக் கையாள மாநிலங்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.