சென்னை: பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜவின் தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை அந்த பொறுப்பை வகித்து வந்த அவர், சுமார் 6 ஆண்டுகள் தேசிய அளவில் மகளிர் அணியை வழிநடத்தி வந்தார். அவர் தற்போது அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வானதி சீனிவாசனுக்கு பதிலாக மகளிர் அணியின் புதிய தேசிய தலைவராக ரூப் குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மகளிர் அணி தேசிய தலைவர் ரூப் குமாரி சவுத்ரி, சட்டீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய பாஜ எம்.பி. இதற்கு முன்பு அவர் சட்டீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானதி சீனிவாசன் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தலைவர் பதவியை பிடிக்க பாஜவில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் வானதி சீனிவாசனும் இருந்து வருகிறார். அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கும் வகையில், அவர் தேசிய மகளிர் அணி தலைவர் பதவி பறிக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து ெதரிவித்துள்ளனர். ஆனால் மற்றொரு தரப்போ, நயினார் நாகேந்திரன் மாற்றப்பட மாட்டார். மகளிர் அணி தலைவியாக அவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.






