ஆதிதிராவிட மகாஜன சங்க ஆயுள் கால உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்: தேர்தல் அறிவிப்பு குறித்து கடும் எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க தீர்மானம்

மாவட்ட பதிவாளர் தேர்தலுக்கு அனுமதி வழங்கியதா? எழுத்துப்பூர்வ உத்தரவு உள்ளதா? – விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி, ஜூலை 25:
திருநெல்வேலி சமாதானபுரத்தில் உள்ள ஸ்ரீ காந்தாரி அம்மன் கோவிலில் இன்று (ஜூலை 25) ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் ஆர்.எஸ். திருச்செல்வன், ராஜேந்திரன், கனரா வங்கி இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அரசு பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார்.

கூட்டத்தில், தினசரி நாளிதழில் தேர்தல் அதிகாரி ராஜபாண்டியன் வெளியிட்டிருந்த தேர்தல் அறிவிப்பு குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
அந்த அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாக சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடியவில்லை என்றும், அதனால் செயற்குழு (அல்லது அக்காடு கமிட்டி) அமைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், மாவட்ட பதிவாளரின் அறிவுரையின்படி தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், அதன் பின்னர் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கும், நிர்வாகக் குழுவை அமைப்பதற்கும் போதிய கால அவகாசம் இருந்ததாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், தேர்தல் அதிகாரி ராஜபாண்டியனின் உதவியுடன், சங்கத்தின் தலைவர் பொறுப்பு வகிக்கும் கவி சுப்பையாவும், பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தியும், முந்தைய தேர்தலைப் போல உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வெற்றி பெறும் நோக்கத்துடன் இந்த தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் சிலர் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

அதே அறிவிப்பில், மாவட்ட பதிவாளரின் அறிவுரையின்படி தேர்தல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில், உண்மையில் மாவட்ட பதிவாளர் தேர்தலுக்கு அனுமதி வழங்கினாரா, வழங்கியிருந்தால் அது வாய்மொழியாகவா அல்லது எழுத்துப்பூர்வமாகவா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இதுகுறித்து மாவட்ட பதிவாளரிடம் விளக்கம் கோரவும், தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வரும் ஜூலை 27 அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் மனு அளிக்கவும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறியாளர் சாந்தகுமார், செல்லத்துரை, தமிழ்ச்செல்வி, ராமச்சந்திரன், வளையாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்