ஆகஸ்ட் 17 தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஆலோசனை கூட்டம்

ஏற்காடு தொகுதி சார்பில் ரூ.2 லட்சம் நிதி, 50 வாகனங்களில் பொதுமக்களை அழைத்துச் செல்ல தீர்மானம்
சேலம், ஜூலை 19:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சார்பில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாடு மற்றும் எழுச்சித் தமிழர் பிறந்த நாள் விழா தொடர்பான மாவட்ட, மண்டல, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெ. வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிறுத்தை சீனிவாசன் முன்னிலை வகித்தார். வே.சு. மணியன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல துணைச் செயலாளர் கோ. நாராயணன் மற்றும் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சிதம்பரம் செங்கதிர் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாட்டிற்கான பணிகள், மக்கள் திரட்டல், பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு ஏற்காடு சட்டமன்றத் தொகுதி சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்க ஏற்காடு தொகுதியிலிருந்து 50 வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பு வழங்குவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எழுச்சித் தமிழர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டறிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில், ஒன்றிய துணைச் செயலாளர் பெ. பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கும் மாவட்ட செயலாளர் பெ. வேல்முருகன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.