எரிக்கலம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் மூன்றாவது வார சிறப்பு ஜெப வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேரன்மகாதேவி, ஜூலை 14:
சேரன்மகாதேவி அருகே இடையன்குளம் ஊராட்சிக்குட்பட்ட எரிக்கலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், ஆலயப் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் 13 வார சிறப்பு ஜெப வழிபாட்டின் மூன்றாவது வார நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, புனித அந்தோணியார் அங்கி அணிந்து, புனித தீபம் ஏற்றப்பட்டு ஜெப வழிபாடு தொடங்கப்பட்டது. பின்னர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஜெபப் பீடத்தில் (கெபி) சிறப்பு மறையுரை மற்றும் ஜெப நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த வழிபாட்டில் எரிக்கலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு வெளியூர் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அந்தோணியாரிடம் தங்களது வேண்டுதல்களை சமர்ப்பித்து ஆசி பெற்றனர்.

புனித அந்தோணியாரின் அருளால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளதாக நம்பிக்கை கொண்ட பக்தர்கள், தொடர்ந்து நடைபெறும் 13 வார ஜெப நிகழ்ச்சிகளில் பங்கேற்று இறையருளையும், புனித அந்தோணியாரின் ஆசியையும் பெற்று வருவதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேரன்மகாதேவியைச் சேர்ந்த மைக்கேல் தலைமையில் ரவி மற்றும் ஆலய தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்ட சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமாக இரவு உணவு வழங்கப்பட்டது.






