சென்னை: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்கள் விமானத்தில் சென்னை, கோவைக்கு வந்தன. அவற்றை அரசு அதிகாரிகள் மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். வியட்நாம் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 தமிழர்கள், ஆந்திராவை சேர்ந்த 3 பேர், கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த 10 பேரின் உடல்களை கொண்டு வர முதல்வர் விஜய் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும், சேலம் டிஐஜியை வியட்நாமிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, 15 இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள், சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு விமானங்களில் கொண்டு வரப்பட்டன. முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரவிசங்கர் (51), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினயகுமார் (36) ஆகியோரின் உடல்கள் நேற்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மும்பையில் இருந்து சென்னை வந்தன.
வேலூர் எம்எல்ஏ வினோத் கண்ணன், சென்னை விமான நிலையத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினயகுமார் உடலை பெறுவதற்காக, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் உடலை ஒப்படைத்து, அரசு ஏற்பாடு செய்த சிறப்பு வாகனத்தில், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த ரவிசங்கரின் குடும்பத்தினர், சென்னை விமான நிலையத்திற்கு வராததால் அவரது உடலை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை அகரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாபு ஆகியோரின் உடல்கள், நேற்று மதியம் 12 மணியளவில் மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்தன.
அதேபோல், 6 பேர் உடல்களும் மும்பையில் இருந்து விமானத்தில் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டன. வேலூர் மாவட்டம் வினயகுமார் உடலை பெற்றுக் கொள்ள சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரது மாமனார் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வியட்நாமில் நடந்த லாவா நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வினயகுமார் சென்று இருந்தார்.
கூட்டம் நடைபெறும் தீவுக்கு செல்ல, படகில் பயணித்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தது எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த தகவல் கிடைத்த உடனே, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், அதிகாரிகள் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். அதேபோல் வியட்நாமில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, அங்குள்ள ஒவ்வொரு நடவடிக்கையையும் உடனுக்குடன் தெரிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.
இன்று (நேற்று) வேலூரில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், உடலை வீட்டிற்கு கொண்டு சென்ற பிறகு, குளிர்சாதன பெட்டியில் வைப்பதில் சிரமம் ஏற்படக்கூடும் என்று கவலைப்பட்டோம். இதனை அறிந்த வேலூர் மாவட்ட அரசு அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி, ஜெனரேட்டர் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். எங்களின் துயரமான நேரத்தில், மத்திய, தமிழக அரசின் உதவியை எங்கள் குடும்பம் மறக்காது. இவ்வாறு அவர் கூறினார்.






