ஜூலை 15-ல் ஆஜராக எ.வ.வேலுவுக்கு நிபந்தனை : நீதிமன்றத்தில் பரபர வாதம்!

வரும் ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 9) இடைக்கால தடை விதித்தது.

கரூர், திருப்பூர் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை , விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் உடல் நல பாதிப்பு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (ஜூலை 9) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,  எ.வ.வேலு சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா,   ”ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-இன் கீழ், எ.வ வேலு மீது வழக்குத் தொடர்வதற்கு முன்னதாக முறையான அனுமதி பெறப்படவில்லை.

சட்டம் மிக தெளிவாக சொல்கிறது.  ஆளுநரின் அனுமதி பெறாமல் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரவே முடியாது.

இந்த வழக்கில்,  சாலையே போடவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது. திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் போட முடியாமல் போயிருக்கலாம், ஆனால் பின்னர் ஒரு தேதியில்  சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டது” என்று வாதங்களை முன்வைத்தார்.

அதுபோன்று எ.வ.வேலு சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் வில்சன்,  ”ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தே இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான எந்தவொரு நம்பகமான ஆதாரமோ, அவசியமோ அல்லது நியாயமான காரணமோ இல்லை.

விசாரணைக்கு ஆஜராகக் கோரி ஜூன் 30 அன்றுதான் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ஜூன் 26 அன்றே எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஜூலை 12-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்க வேண்டியுள்ளது. அதனால் அந்த தேதிக்கு பிறகு அவர் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார்.  2022-லேயே புகார் அளிக்கப்பட்டிருந்தும் 2026-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆட்சி மாற்றத்தின் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கை. தேவையில்லாமல் இழுத்தடிக்க விரும்புகிறார்கள். 76 வயதான எ.வ.வேலுவுக்கு இதயம் தொடர்பான உடல்நல பிரச்சினை உள்ளது” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாதங்களை முன்வைத்த அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்,  ”சாலை பணிகளை மேற்கொள்ளாமலே,   ஒப்பந்தங்களுக்கான தொகைகள் வழங்கப்பட்டதைக் காட்டுவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன்,  வரும் ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை முன் எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து, லுக் அவுட் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தார்.

எ.வ.வேலு எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய கோரிய விவகாரத்தில்,  லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.

அதுபோன்று வரும் ஜூலை 28 வரை  எ.வ.வேலுவை கைது செய்வது போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.