மேலவளவு நினைவு நாளில் திருமாவளவன் பேச்சு: “விசிக இல்லாமல் இனி தமிழக அரசியல் இயங்காது”
மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் மேலவளவு முருகேசன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மேலும் 6 பேரின் நினைவு நாளையொட்டி அவர்களது மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மேலவளவு முருகேசனை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்த மண், இன்று பொதுத்தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளது. இது சமூக மாற்றத்தின் அடையாளமாகும்” என்றார்.
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக சீமான் நிறுத்தப்படுவார் என்ற தகவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது தற்போது ஒரு யூகம்தான்; பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இது சாதிப் பெருமை பேசும் நிகழ்ச்சி அல்ல. கடந்த ஒரு ஆண்டில் நாம் என்ன சாதித்தோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை மீளாய்வு செய்யும் அரசியல் களமாக மேலவளவு திகழ்கிறது. அவதூறுகள், வஞ்சகங்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் நமது இயக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது” என்றார்.
1997-ஆம் ஆண்டு மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்டபோது தலித் அரசியல் இவ்வளவு வலுவாக பேசப்படவில்லை என்றும், இன்று தமிழக அரசியலில் தலித் முதல்வர் குறித்து பேசப்படும் நிலை உருவாகியிருப்பது விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நீண்டகால போராட்டத்தின் விளைவு என்றும் கூறினார்.
மேலும், “இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள கட்சி என எங்களை கிண்டல் செய்தவர்கள், இன்று அந்த இரண்டு இடங்களின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இனி விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் தமிழக அரசியல் இயங்காது. இது ஆணவத்தால் கூறப்படுவது அல்ல; அரசியலின் போக்கை அறிந்து கூறப்படுவது” என்று தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “எங்களுக்கு கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் மாற்று தலைமுறையை உருவாக்கும் நோக்கில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.
அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து சம்பந்தப்பட்ட கட்சியிடமே கேட்க வேண்டும் என்றும், அதில் கருத்து தெரிவித்தாலே தவறாகப் பொருள் கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
அமைச்சர் வன்னி அரசின் துறையை மாற்ற வேண்டும் என தாம் அழுத்தம் கொடுத்ததாக வெளியாகும் தகவல்களை மறுத்த திருமாவளவன், “அப்படிப்பட்ட பேச்சுவார்த்தையே நடந்ததில்லை. அமைச்சர் வன்னி அரசு திறம்பட செயல்பட்டு வருவதால் சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.
மேலும், இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
விசிக இன்று ஒரு சமூக அடையாள இயக்கமாக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசியல் இயக்கமாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறிய அவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
தென் மாவட்டங்களில் விசிக வளர்ச்சி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது இயக்கத்தின் வளர்ச்சிக்கான சான்று என்றும், கூட்டணி ஆட்சியின் மூலம் உண்மையான அரசியல் பிரதிநிதித்துவம் தமிழகத்தில் மலர்ந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
மேலவளவு நினைவு நாளில் திருமாவளவன் பேச்சு: “விசிக இல்லாமல் இனி தமிழக அரசியல் இயங்காது”






