பத்திரிகையாளர்களை சந்திப்பது எப்படி? முதல்வர் விஜய்க்கு கிளாஸ் எடுக்கும் ஜெயக்குமார்: பதிலடி கொடுக்கும் தவெகவினர்; விவாதங்களை கிளப்பிய புகைப்படங்கள்

சென்னை: முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு ஏஐ புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். இதற்கு தவெகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சி துவங்கியதில் இருந்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகாவது, அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.

இந்த முறை எப்படியாவது வெற்றி பெறுவார் என பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், இந்த தேர்தலிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் சமீப காலமாக கட்சி சார்ந்த விஷயங்களில் ஜெயக்குமார் பெரியளவில் தலைக்காட்டாமல் இருக்கிறார். அதே நேரம் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அவர், தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜெயக்குமார் பகிர்ந்துள்ள ஏஐ புகைப்படம் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில், தமிழ்நாட்டு ஊடகங்களை எப்படி எதிர்கொள்வது என ஒயிட் போர்டில் ஜெயக்குமார் கிளாஸ் எடுக்கிறார். எதிரில் முதல்வர் விஜய் உட்கார்ந்து இருக்க, அவருக்கு ஜெயக்குமார் வகுப்பு எடுப்பது போன்று அந்த புகைப்படம் அமைந்துள்ளது. அதில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது 7 கோடி தமிழ்நாட்டு மக்களிடம் பேசுவதை போன்று என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஊடகங்கள் எதிரிகள் கிடையாது. மீடியாவை மதிக்க வேண்டும். ஆட்சியாளர்களையும், மக்களையும் இணைக்கும் பாலத்தை போன்றவர்கள் அவர்கள். அதோடு பல பாயிண்ட்களுடன் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வகுப்பு எடுக்கிறார் ஜெயக்குமார். இப்படியாக அந்த ஏஐ போட்டோ அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி கவனம் ஈர்த்து கொண்டிருக்க, தவெகவினர் ஜெயக்குமாரின் செயலுக்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

அதாவது முதல்வர் விஜய், தேர்தலில் ஜெயிப்பது எப்படி என்று ஏஐ புகைப்படத்தை உருவாக்கி ஜெயக்குமாரின் பதிவுக்கு கீழ் கமெண்ட்டில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு ஜெயக்குமார் இந்த முறை தேர்தலில் டெபாசிட் பெறவில்லை. அதனையும் கிண்டல் செய்யும் விதமாக ராயபுரம் எம்எல்ஏ தாமு, தேர்தலில் டெபாசிட் பெறுவது எப்படி என்று கிளாஸ் எடுப்பதை போன்றும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து வர, ஜெயக்குமார் பகிர்ந்த ஏஐ புகைப்படம் பெரிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அதோடு அவருடைய ஆதரவாளர்கள் மீண்டும் நீங்கள் ஆக்டிவ் பாலிடிக்ஸ்குள் வர வேண்டும். பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து பேசி, முதல்வருக்கு எப்படி மீடியாவை சந்திப்பது என்பதை காட்ட வேண்டும் எனவும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

அதிமுகவின் முக்கிய முகமாக திகழும் ஜெயக்குமார் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரிடம் தோற்றார். இதனையடுத்து இந்த தேர்தலில் அவர் தொகுதி மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் தான் உயிருள்ள வரை போட்டியிடுவேன். இந்த முறை நீங்கள் என்னை ஜெயிக்க வைப்பீர்கள் என நம்பிக்கையுடன் பேசி இருந்தார். ஆனால் இந்த தேர்தலில் ஜெயக்குமார் டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.