வீட்டு வாடகை கேட்ட ராணுவ வீரரின் மனைவிக்கு மிரட்டல்: தந்தை, மகன் கைது
ஆலங்குளம், ஜூன் 15:
ஆலங்குளம் அருகே வீட்டு வாடகை பணம் கேட்ட ராணுவ வீரரின் மனைவியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – நல்லூர் சாலையில், ராணுவ வீரரான அருணாசலத்திற்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டிருந்தார்.
அந்த வீட்டில் வசித்து வந்த வாடகையாளர், நீண்ட நாட்களாக வாடகைத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று அருணாசலத்தின் மனைவி செல்வம் (56), வாடகைத் தொகையை கேட்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
இதையறிந்த வாடகையாளரின் உறவினர்களான குருவன்கோட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பையாவின் மகன் ராஜாஜி (55) மற்றும் அவரது மகன் மாதவன் (25) ஆகியோர், செல்வம் வீட்டிற்கு சென்று, வாடகை எவ்வாறு கேட்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் செல்வத்தை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராஜாஜி மற்றும் அவரது மகன் மாதவனை போலீசார் கைது செய்தனர்.






