“தொண்டர்களை மதிக்காததே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம்” – திமுக முன்னாள் நிர்வாகி டாக்டர் ரா. ஞானசோமராஜ் வேதனை

திமுக தொண்டர்களின் உழைப்பையும், மக்கள் கோரிக்கைகளையும் மதிக்காத அணுகுமுறையே சமீபத்திய தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் பாளை நகர திமுக கூடுதல் துணைச் செயலாளருமான டாக்டர் ரா. ஞானசோமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நாம் மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்” என்ற கழகத் தலைமையின் நம்பிக்கை வார்த்தைகள் உயிர் பெற வேண்டுமெனில், ஒவ்வொரு திமுக தொண்டரும் தினந்தோறும் கழக வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். அதே நேரத்தில், தொண்டர்களின் குடும்ப நலனிலும் கழகம் அக்கறை காட்ட வேண்டும்.

அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் திட்டங்களைப் போல, தொண்டர்களைத் தேடி நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும். மக்களுக்காக திமுக தொண்டர்கள் வைக்கும் கோரிக்கைகளை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கவனித்து நிறைவேற்ற வேண்டும்.

ஒரு வார்டின் ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்காக உழைக்கும் திமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் முன்வைக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முனைப்புக் காட்ட வேண்டும். ஆனால் பல இடங்களில் மக்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால், தேர்தல் நேரத்தில் மக்களும் கட்சியை புறக்கணித்த சூழல் உருவானது.

மேலும், தேர்தல் காலத்தில் வீடு வீடாகச் சென்று சேர வேண்டிய பிரச்சார நோட்டீஸ்கள் சரியாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. சில நிர்வாகிகளின் அலட்சியமும், கட்சியின் வெற்றிக்காக செயல்பட வேண்டிய நேரத்தில் ஏற்பட்ட தவறுகளும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

பதவியில் இருப்பவர்கள் தொண்டர்களை மதிக்க வேண்டும். தொண்டர்களிடம் புன்னகையுடன் பேசி, அவர்களின் நலனை விசாரிப்பது கூட உற்சாகத்தை ஏற்படுத்தும். எனக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றபோது, பலரும் நலம் விசாரிக்கவில்லை என்பது மன வேதனையை ஏற்படுத்தியது. இருப்பினும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற உதவிய சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப் மற்றும் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகப் பணியும், நான் சார்ந்துள்ள பாளையங்கோட்டை 8வது வார்டு மக்களுக்கான மக்கள் சேவையும், என் உயிர் உள்ளவரை தொடர்ந்து நடைபெறும்” என்று டாக்டர் ரா. ஞானசோமராஜ் தெரிவித்துள்ளார்.

– டாக்டர் ரா. ஞானசோமராஜ்
முன்னாள் மாவட்ட பிரதிநிதி (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்)
முன்னாள் பாளை நகர திமுக கூடுதல் துணைச் செயலாளர்
தற்போது: பாக முகவர்
தொடர்பு எண்: 99447 51403