“தவெக-வுடன் கைகோர்த்தது ஏன்? ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும்!” – திமுகவினரின் விமர்சனத்திற்குத் திருமா விளக்கம்!

தவெக அமைச்சரவையில் விசிக இணைந்த நிலைக்கு திமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், “இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்க வேண்டாம்; விட்டுவிடுங்கள், கடந்து செல்லுங்கள்” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியதாவது:

“ஆ. ராஜா நம்முடைய முடிவை விமர்சனம் செய்திருந்தார். தோழர்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள். நான் ‘அதைப் பொருட்படுத்த வேண்டாம், கடந்து செல்லுங்கள்; அதற்கு யாரும் எதிர்வினை ஆற்ற வேண்டாம்’ என்று என்னைத் தொடர்பு கொண்ட தோழர்களிடம் அறிவுறுத்தினேன். அவர் காங்கிரஸைப் பற்றி அப்படி விமர்சித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இடதுசாரிகள் ஆதரவு நல்கியதும் ஒரு அணிமாற்றம்தான். அவர்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை; ஆனால் தவெகவிற்கு ஆதரவு நல்கியிருக்கிறார்கள். அதே நிலைப்பாட்டைத்தான் நாமும் எடுத்தோம்.

ஆனால், நம்முடைய தோழர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும், அதுவும் நானே இடம்பெற வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகவும், தவெக தரப்பில் அழைப்பு விடுத்ததன் விளைவாகவும் அமைச்சரவையில் நாம் இடம்பெறுவது என்ற முடிவை எடுத்தோம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலினிடம், ‘இந்த ஆதரவு நல்குவது என்கிற முடிவை, இடதுசாரிகள் எடுத்த முடிவைப் போல நாங்களும் எடுக்கிறோம்’ என்று நேரிலே சந்தித்துச் சொல்லிவிட்டுத்தான் ஆதரவை நல்கினோம். அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘அதனால் ஒன்றுமில்லை, நீங்கள் ஆதரவு நல்கலாம்’ என்று இசைவு தந்தார்.

அமைச்சரவையில் இடம்பெறப்போவதை அப்போது அவருக்குத் தெரிவிக்க முடியவில்லை. ஆனால், முன்னணி அமைச்சர்கள் ஒருசிலரை நான் தொடர்பு கொண்டு, இப்படி ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் செய்தியாளர்களைச் சந்தித்து ‘விசிக அமைச்சரவையில் இடம்பெறுகிறது’ என்று அறிவிப்பு செய்தேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயணித்து வருகிறது. எந்த அளவுக்கு அந்தத் தோழமைக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம், எந்த அளவுக்கு உற்ற துணையாக இருந்திருக்கிறோம், அந்தக் கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எங்களால் ஆன பங்களிப்பை எவ்வளவு செலுத்தியிருக்கிறோம் என்பதை திமுக தலைவர் அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிக நன்கு அறிவார். அன்பு இளவல் மேனாள் துணை முதல்வர் உதயநிதியும் நன்கு அறிவார். சுற்றியிருப்பவர்கள் ஒருசிலரும் நன்கு அறிவார்கள்.

ஆனால், அதையும் தாண்டி நாம் எடுத்த இந்த முடிவை திமுக தரப்பில் ஆ.ராஜா உட்பட பலர் விமர்சிக்கிறார்கள் என்கிறபோது சற்று வலியாகத்தான் இருக்கிறது. என்றாலும் கூட, அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, திமுகவைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கிற தவெகவோடு நாம் கைகோர்ப்பதை அல்லது அவர்களோடு களத்தில் நிற்பதை அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை அவ்வளவு எளிதாக எப்படி திமுக தொண்டர்களால் கடந்து செல்ல முடியும்? இது மனித இயல்புதான். ‘கடும் சொற்களால் விமர்சிக்கக் கூடாது’ என்று அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்; ‘அந்தப் பதிவை உடனே எடுக்கும்படி’ ஆணையிட்டிருக்கிறார். இதுவும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில், ஆ.ராஜா அவர்களை எதிர்த்து விமர்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்வதோ அல்லது போராட்டங்களை நடத்துவதோ தேவையற்றது. இயக்கத் தோழர்கள் இதைக் கடந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். நம்மைப் பிடிக்காதவர்கள் எப்போதும் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நம்முடைய வளர்ச்சியை விரும்பாத, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எப்போதும் நமக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பிக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் எந்த முடிவு எடுத்தாலும் விமர்சிப்பார்கள்.

திமுக அணியிலேயே தொடர்வது என்றாலும் மீண்டும் ‘திமுக கொத்தடிமை’ என்பார்கள். ‘திமுகவிடம் ஏதோ இவர்கள் பெரிய அளவில் கைநீட்டி வாங்கிவிட்டார்கள், அதனால்தான் வெளியே வர முடியவில்லை’ என்று விமர்சிப்பார்கள். இப்படி திமுக ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து மாறி வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும் அதேபோல விமர்சனங்களை அள்ளி இறைப்பார்கள்.

‘காங்கிரஸ் செய்த துரோகத்தை விட விசிக செய்த துரோகம் பெரிது’ என்று கூலிக்கு மாரடிக்கும் கும்பல் நமக்கு எதிரான அவதூறுகளை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது. ‘தேர்தலுக்கு முன்பே ஆதவ் அர்ஜுனாவோடு திட்டமிட்டு நாம் சதி செய்தோம்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். மேனாள் முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனசாட்சிக்கு அது தெரியும். விடுதலைச் சிறுத்தைகளும் திருமாவளவனும் எந்த அளவுக்கு நேர்மையான உறவைக் கொண்டிருந்தோம், நட்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம், அந்தக் கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும் என்பதில், அதைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில், அது வெற்றி பெற வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தோம் என்பது அண்ணன் அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். வேறு யாருக்கும் இது தெரிய வேண்டும் என்பதில்லை.

எனவே, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்; இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்க வேண்டாம். விட்டுவிடுங்கள், கடந்து செல்லுங்கள்” என்றார்.