சட்டசபையில் தவெகவிற்கு ஆதரவு குரல் அமமுக எம்எல்ஏ காமராஜ் கட்சியில் இருந்து நீக்கம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு மன்னார்குடி தொகுதியில் மட்டும் அமமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் வெற்றி பெற்றார். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத தவெக ஆட்சிக்கு அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கொடுத்ததாக வந்த செய்தியை டிடிவி.தினகரன் மறுத்தார். ஆளுநரிடம் தவெக கொடுத்த கடிதம் போலி என்றும், தனது எம்எல்ஏவை தவெகவினர் குதிரைப் பேரம் செய்து கவர்ந்ததாகவும், ஒரு எம்எல்ஏ இருப்பதால் கட்சி தாவல் சட்டம் வராது அதனால் மிரட்டி ஆதரவு கேட்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

இந் நிலையில் நேற்று சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் பொறுப்பேற்றனர். அப்போது சபாநாயகரை வரவேற்று அமமுக எம்எல்ஏ காமராஜ் பேசியபோது, தவெகவுக்கு முழு ஆதரவையும் தருவேன் என்றார். இதனையடுத்து அமமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எம்எல்ஏ காமராஜ் நீக்கப்படுவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது. காமராஜ் செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் செஞ்சது தப்பா -காமராஜ்

கடந்த 10 ஆண்டுகாலமாக அமமுகவிற்கு உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசாக கட்சியிலிருந்து நீக்கத்தை எடுத்துக்கொள்கிறேன். சில சிரமங்கள், சில சங்கடங்கள், பொருளாதார இழப்புகள் என சந்தித்தோம், தலைமை முடிவு எடுக்கும்போது கட்டுப்பட்டுத்தான் ஆகணும். ஒன்றும் வருத்தமில்லை. மன்னார்குடி மக்களுக்கு திட்டங்கள் நிறைய செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் முதல்வரை புகழ்ந்து பேசுவது தவறா?