திருச்சி: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பெரம்பூரில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றியடைந்தார். 2 தொகுதியில் வெற்றி பெற்றாலும், ஏதாவது ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி விஜய் எந்த தொகுதியில் ராஜினாமா செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தவெக வட்டாரத்தில் விசாரித்த போது, விஜய் பெரம்பூரில் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே அந்த தொகுதியை தக்க வைக்க வாய்ப்புள்ளது. மேலும் பெரம்பூர் சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதி. விஜய் எளிதில் தொகுதிக்கு சென்று வரலாம். திருச்சி கிழக்கு என்றால் அலைச்சல் இருக்கும். எனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யக்கூடும். அவர் ராஜினாமா செய்யும் தொகுதியில் அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடக்கும் என்றனர்.






