ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.62,000 பறிமுதல் பரமக்குடி
தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நயினார் கோவில் சோதனை சாவடி அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் பயணம் செய்த நபர் உரிய ஆவணங்களின்றி ரூ.62,000 பணத்தை கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பண பரிவர்த்தனை நடை பெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தை முன்னிட்டு, உரிய ஆவணங்களின்றி அதிக அளவில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






