“ஆபரேஷன் சிந்தூர்” விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
பீகார் விவகாரம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இருவாரஅவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மூன்றாவது நாளாக அவைகள் முடங்கின.
மக்களவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் மாயமாக இருக்கிறார்கள். இது அங்கு மட்டுமல்ல அவர்கள் மராட்டிய தேர்தலிலும் வேலையை காண்பித்து உள்ளனர்.
வாக்காளர் பட்டியலை காட்டுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர் வீடியோவை காட்டுமாறு கேட்டோம் ஆனால் அவர்கள் விதிகளை மாற்றினர். மராட்டிய மாநிலத்தில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
கர்நாடகத்திலும் ஒரு பெரிய முறைகேட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது எப்படி நடக்கிறது? என்பதை நான் தேர்தல் கமிஷனிடம் காண்பிப்பேன். அவர்களின் விளையாட்டு இப்போது எங்களுக்கு தெரியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்தான் போரை நிறுத்தியதாக கூறுகிறார். ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய அவர் யார்? இது அவருடைய வேலை அல்ல.
“ஆபரேஷன் சிந்தூர்” குறித்தும் நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். பிரதமரால் இது குறித்து ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லை. அவர் பதில் அளிக்கவில்லை. இதுதான் உண்மை ஆனால் நீங்கள் அதிலிருந்து ஓடிவிட முடியாது அவர் பதில் அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.






