சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் மேலும் ஒரு வாரத்திற்கு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் ராஜ்வான் மாவட்டத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. கனமழை நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேரை காணவில்லை. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கின்றன.
மீட்பு பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்திருக்கின்றனர். ஆனால், தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. செல்போன் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ளவர்களை தொடர்புகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், “இமாச்சலப் பிரதேசம் மிகப்பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 50 பேரை காணவில்லை. 2 பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். மீட்பு பணிக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை நாடியுள்ளோம்.






