சேரன்மகாதேவியில்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
சேரன்மகாதேவி, செப்.19. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேளாண் துறை பணியான டிஜிட்டல் கிராப் சர்வே தொடர்பான பணியை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்த வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை கண்டித்தும், மேலும்
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கையடக்க கணிணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேரன்மகாதேவியில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் சி. குமார் தொடக்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலர் செல்வகுமார், வட்டத் தலைவர்கள் சகாதேவன், செ. பாலசுப்பிரமணியன், எம். பொன்பாண்டியன், இசக்கியப்பன், செயலர்கள் மணிகண்டன், குத்தாலிங்கம், குணசேகரன், செல்வகுமார், நிர்வாகிகள் பட்டு, சங்கரநாராயணன், ஜெகன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






