முதல்வர் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை:செப்.18 டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 28ம் தேதிஅடிக்கல் நாட்டுகிறார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கிவருகிறது.
இந்த நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர கார்களை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது.குறிப்பாக தொழில் துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி 19நாட்களுக்கு அமெரிக்க நாட்டிற்கு முதல்வர் பயணம் மேற்கொண்டு பல புதிய முதலீட்டுத் திட்டங்களை கொண்டு வந்தார். சென்னை மறைமலை நகரில் கார் உற்பத்தியை நிறுத்திக்கொண்ட போர்டு நிறுவனம், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் உற்பத்தி ஆலையை தொடங்குவதாக அறிவித்தது. ஏற்கெனவே சென்னை பன்னாட்டு கார்கள் உற்பத்தி முனையமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில்,தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 9,000 கோடி ரூபாய் முதலீடு
செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும்,டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால்,சுமார் 5,000 வேலை வாய்ப்புகள்
உருவாகும் எனடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும் எனவும், அதில் மூன்றில் ஒரு பகுதி ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும்
எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கார்கள் உட்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்யப்பட
இருக்கின்றன. இந்த கார் ஆலை ராணிப்பேட்டையில் அமைய இருக்கிறது. 2026ம் ஆண்டுக்குள் பெரும்பாலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எனவே, ராணிப்பேட்டை ஆலை எலெக்ட்ரிக்கார் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில்
இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக்கார்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் பலம். சென்னைையை அடுத்த ராணிப்பேட்டையில் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் 400 ஏக்கரில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.அன்றைய தினம், ரூ.400 கோடியில் பனப்பாக்கத்தில் அமைய உள்ள காலணி பூங்காவுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.* 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 400 ஏக்கரில் ராணிப்பேட்டையில் இந்த கார் ஆலை அமைய உள்ளது. * இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டம்.* ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும்.