32 ஆண்டுகளுக்குப் பின் திமுகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்

32 ஆண்டுகளுக்குப் பின் திமுகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்

மலுக்காமலி, பிரம்மாள், வேலம்மாள் உள்ளிட்டோர் தாய்க்கழகத்தில் இணைந்தனர்

திருநெல்வேலி, செப். 5:
திருநெல்வேலி மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதிமுக மாநில சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் பத்தமடை கே.வி. மலுக்காமலி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவில் மீண்டும் இணைந்தார்.

முன்னாள் சபாநாயகரும், திமுக நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளருமான திரு. இரா. ஆவுடையப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு. ஜோயல், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜ் மற்றும் மாவட்ட கழக முன்னணியினர் பங்கேற்றனர்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சி மதிமுக கவுன்சிலர் திருமதி ஏ.எம். பிரம்மாள் பி.வி. அவர்களும் தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

மேலும், மதிமுக புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி வீரநல்லூர் வேலம்மாளும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

முன்னதாக, மலுக்காமலி, பிரம்மாள் உள்ளிட்டோர் கடந்த வாரம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளரையும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றிருந்தனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருப்பது, திருநெல்வேலி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.