தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது நீதிபதி அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்கிறதா?.. தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை பொதுப்பணித்துறை அமைச்சர் சொல்கிறார். நான் சொல்கிறேன், அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை உங்கள் கையில் இருக்கிறது. அந்த நடவடிக்கையை இப்போது நீங்கள் எடுங்கள். உண்மையாகவே அரசுக்கு தைரியம் இருந்தால் நாங்கள் எடுக்க தவறிய அந்த நடவடிக்கையை நீங்கள் எடுங்கள் என்று நான் சவால் விடுகிறேன். அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது சொன்னார், துணை முதல்வராக நான் இருக்கும்போது சட்டமன்றத்துக்கு வரவில்லை. என் சார்பாக, முதல்வர் பதில் சொன்னார் என்று. அது நடந்தது ஒரே ஒரு நாள்.

எனக்கு உடல்நிலை சரியில்லை. மானியக் கோரிக்கையில் நான் பதில் சொல்ல வேண்டியது. முதல்வர் எழுந்து அவர் நாளை வந்து பதில் சொல்வார் என்று சொன்னார். நான் அன்றைக்கு அவைக்கு வரவில்லை. ஆனால், இன்றைக்கு முதல்வர் அவையிலேயே இருக்கிறார். அப்படி இருக்கும்போது, அவர் பதில் சொல்லாமல், ஏன் நீங்களெல்லாம் பதில் சொல்கிறீர்கள் என்பதுதான் எங்களின் கேள்வி. அமைச்சர் அருண்ராஜ் பேசும்போது, தயாராக வந்திருக்கிறோம், 100 நாட்களாக இதைத்தான் தயார் செய்தோம் என்று சொன்னார். நாங்களும் உங்கள் முதல்வரை தயார் செய்துவிட்டு வாருங்கள் என்றுதான் சொன்னோமே தவிர, நீங்கள்தான் சொன்னீர்கள், தயாராக இருக்கிறார். தயாராகிவிட்டு வருவார் என்று சொன்னீர்கள்.

அதைதான் நாங்களும் சொன்னோம். இன்னொன்று, எப்போதாவது ஆபத்து அதிகமாக இருக்கும்போது நாம் கொஞ்சம் ப்ரீப்பேர்டாக இருப்பது நல்லது. எனவே, இந்த அரசில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. எனவே, நாங்கள் எப்போதும் ப்ரீப்பேர்டாகத்தான் இருக்கிறோம். அமைச்சர் என்.ஆனந்த் பேசும்போது, தேர்தலுக்கு முன்பு நாங்கள் அவரைப்பற்றி பேசி பேசித்தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டோம் என்று சொன்னார். உண்மையை சொல்லட்டுமா, நான், எங்கள் தலைவர், எங்கள் முன்னணி தலைவர்கள் யாரும் அவர்களை பற்றி பேசாமல் இருந்ததால்தான் அவர்கள் இந்த பக்கம் வந்துவிட்டார்கள். ஒரு வார்த்தைக்கூட அவர்களைப்பற்றி நாங்கள் பேசவே இல்லை. பேசியதற்கான ஆதாரம் ஏதாவது இருந்தால் காட்டுங்கள்.

ஏனென்றால், ஒரு பிரசார கூட்டத்தில்கூட இவர்களை பற்றி நாங்கள் பேசவும் இல்லை. இவர்களை நாங்கள் விமர்சனமும் செய்யவில்லை. அதேமாதிரி அவர்கள் தலைவர் பேச, நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். எங்கெல்லாம் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறோம். அனைவருக்கும் என்ன விதிகள் பின்பற்றபட்டதோ அதுதான். தேர்தல் விதிமுறை வந்தவுடன், அவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள்தான் முடிவெடுப்பார்கள். இது அரசு எடுக்கக்கூடிய முடிவு கிடையாது.

சில மாவட்டங்களுக்கு எல்லாம் சென்று, அவர்களின் தலைவர் (விஜய்) பிரசாரம் செய்தார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கெல்லாம் சென்றார். அங்கு ஒரு தொகுதிகூட அவர்கள் வெற்றிபெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது மெஜாரிட்டி இல்லாத அரசாகத்தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. பெரும்பான்மையே அவர்களுக்கு கிடையாது. எங்கள் தயவில் அவர்களின் ஆட்சி இன்று நடந்துகொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.