நாட்றம்பள்ளி வட்டாட்சியரை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் video;

அனைத்து செய்தியாளர்களையும் அவமதிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் நாட்றம்பள்ளி வட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்றம்பள்ளி பகுதியில் ஒரு சில பத்திரிகையாளர்கள் செய்ததாகக் கூறப்படும் தவறை காரணமாகக் கொண்டு, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பணியாற்றி வரும் செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் அனைத்து செய்தி ஆசிரியர்களுக்கும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.

ஒரு சிலரின் செயலுக்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பத்திரிகையாளர்களின் பணியை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அனைத்து பதிப்பு ஆசிரியர்களுக்கும் மீண்டும் முறையான சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்தப் போராட்டம் திருப்பத்தூர் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் தீவிரப்படுத்தப்படும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தை திருப்பத்தூர் பிரஸ் கிளப் தலைவர் திரு. வெங்கடேசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பிரஸ் கிளப் சங்க செயலாளர் திரு. சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி, நகர தலைவர் மோகன் லட்சுமி, வாணியம்பாடி பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், அஞ்சி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு, நாட்றம்பள்ளி வட்டாட்சியருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பத்திரிகையாளர்களின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.