“உதயநிதி இல்லை.. ஆபாசநிதி! பெண்களை பற்றி யார் அவதூறாக பேசினாலும் கைது செய்வோம்!” ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். உதயநிதியை ஆபாச நிதி என அழைக்க வேண்டும் என சாடிய ஆதவ் அர்ஜுனா, இனி கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக முடியாது என்றும் கடுமையாக சாடினார்.
முதல்வர் விஜய் மற்றும் பிரபல நடிகை தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்ததாக சொல்லி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே திமுக மற்றும் உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜுனா மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு திமுகவினர் வெளியே வரவே மாட்டார்கள். தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்தை தவெக கொண்டு வந்துள்ளது. இனி கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வராக வர முடியாது.

கடும் தாக்கு அவதூறு பேச்சு என்பது திமுகவினரால் இப்போது தொடங்கியது அல்ல. கருணாநிதி காலத்திலேயே திமுக இதை ஆரம்பித்துவிட்டது. இந்திரா காந்தி பற்றியே அவதூறாக பேசியவர் கருணாநிதி. அதை எல்லாம் நான் இப்போது திரும்ப பேச விரும்பவில்லை. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போதும் திமுகவினர் அவதூறாக விமர்சித்துள்ளனர்.

ஆனால், முதல்வர் விஜய் எப்போதும் பெண்களைப் பற்றி தவறாக பேசியதில்லை. திமுக தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. அவர் பேசியது திமுகவின் ஊழல் குறித்து தான்; தனிநபர் தாக்குதல் குறித்து அல்ல. சட்டசபைக்கு வாயை திறங்க சிஎம் என்ற வாசகம் கொண்ட பேட்ஜ் அணிந்து திமுகவினர் வருகிறார்கள். ஆனால், முதல்வர் விஜய் பேசத் தொடங்கியதும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். மேலும், நினைத்திருந்தால் இப்போது தவெகவால் பார்ட்டி பண்ட் வாங்கிருக்க முடியும். ஆனால் வேண்டாம் என்று கூறியவர் முதல்வர் விஜய். முழு அதிகாரம் வந்த பிறகும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது நிலைப்பாடு” என்றார்.

ஆபாசநிதி உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, “தேர்தலில் எங்கள் வெற்றிக்கு காரணம் பெண்கள் தான்.. எனவே அவர்களுக்கு நாங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு பெண் அரசியலுக்கு வரக்கூடாதா? பெண்களை யார் விமர்சித்தாலும் கைது செய்வோம். அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். இனி அவரை உதயநிதி என்று அழைக்கக் கூடாது; ‘ஆபாசநிதி’ என்றே அழைக்க வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் இல்லை.. நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும். 60 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். தவெகவுக்கு எதிராக இருக்கக்கூட உங்களுக்கு தகுதி இல்லை.

உதயநிதி டெபாசிட் வாங்க மாட்டார் திமுக மற்றும் குடும்ப அடையாளத்தை விட்டுவிட்டு உதயநிதி வரட்டும். நாங்கள் இதே சேப்பாக்கத்தில் சாமானிய பெண்ணை நிறுத்துகிறோம். ஒரு முறை மட்டுமே விஜய் பிரச்சாரத்திற்கு வருவார். அப்போதும் கூட உதயநிதி டெபாசிட் கூட வாங்க மாட்டார். ஏனென்றால் கடந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி கூட்டணியால் வந்தது. இப்போது அந்த கூட்டணி முழுக்க முழுக்க தவெகவுடன் இருக்கிறது. எனவே நாங்கள் ஏன் உங்களை பார்த்து பயப்பட வேண்டும்” என்று கடுமையாக சாடினார்.