வள்ளியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தாமதம்: பொதுமக்கள் கடும் அவதி – முன்னறிவிப்பு வழங்காதது ஏன்? டாக்டர் ரா. ஞானசோமராஜ் கேள்வி

வள்ளியூர், ஜூலை 31:

வள்ளியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 31) காலை 11.00 மணி ஆகியும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வராததால், பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் மனஉளைச்சலுக்கு ஆளானனர்.

இதுகுறித்து அலுவலகத்தில் விசாரித்தபோது, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் மாவட்ட அளவிலான கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பத்திரப்பதிவுக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள், வேறு பணிகளை ஒதுக்கிவைத்து வந்தவர்கள், பேருந்து மற்றும் ரயில்களில் திரும்பிச் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள் உள்ளிட்டோர் இந்த தாமதத்தால் பெரும் சிரமத்தை சந்தித்தனர். வயதானவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுடையோரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக சேவகரும், முன்னாள் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாவட்டக் கழக பிரதிநிதியுமான டாக்டர் ரா. ஞானசோமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சார்பதிவாளர்கள் அரசு அலுவல் காரணமாக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்தால், அதுகுறித்து ஓரிரு நாட்களுக்கு முன்பே தொலைக்காட்சி, செய்தித்தாள் அல்லது பிற தகவல் தொடர்பு வழிகளின் மூலம் பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் பொதுமக்கள் தேவையற்ற அலைச்சலையும் மனஉளைச்சலையும் தவிர்த்திருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதுவரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் இதுபோன்ற காலதாமதம் ஏற்பட்டதில்லை. இனிமேல் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.