ஆலங்குளத்தில் 42 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் 2 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

ஆலங்குளத்தில் 42 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
2 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

ஆலங்குளம், ஜூன் 27:தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 42 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லை–தென்காசி சாலையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரத்தில் 3 சாக்கு மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகல்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (தவசுபாண்டி மகன்) மற்றும் ஆலங்குளம் தென்காசி ரோடு முதல் தெருவைச் சேர்ந்த அப்பாதுரை (முருகன் மகன்) என்பது தெரியவந்தது.

மேலும், அப்பாதுரை சுரண்டையில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருவதும், பெங்களூருவில் இருந்து பாலமுருகன் பெயரில் அனுப்பப்பட்ட 3 சாக்கு மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 42 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பாலமுருகன் மற்றும் அப்பாதுரையை கைது செய்தனர். அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குட்கா பொருட்கள் கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.