சேரன்மகாதேவி பேரூராட்சியில் ஆளும் திமுக கட்சிக்குள்ளேயே கடும் மோதல் வெடித்துள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த 18-வது வார்டு திமுக கவுன்சிலர் தேவி, மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி தலைவி மற்றும் நிர்வாகம் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வணிக வளாக கட்டுமானப் பணியின் போது பல பச்சை மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டதாகவும், இது குறித்து பல்வேறு அரசு துறைகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கவுன்சிலர் தேவி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தெருவிளக்கு, குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட வார்டு மக்களுக்கு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
“மக்களுக்கு சேவை செய்ய முடியாத பதவியில் தொடர்வதில் அர்த்தமில்லை” என கூறிய அவர், தனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பேரூராட்சி தலைவியும் அவரது கணவருமே பொறுப்பு என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சேரன்மகாதேவி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






