ஸ்ரீ முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

ஸ்ரீ முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

ஸ்ரீமுஷ்ணம், ஜூன் 13:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் கடலூர் வட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் செம்மண செல்வி, துணை வட்டாட்சியர் சிவகண்டன், நேர்முக உதவியாளர் ராமதாஸ், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் முருகன் செந்தில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை (OAP), குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகன்யா தலைமையில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன், தென்பாதி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாணவ-மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் கோரி மனு அளித்தார்.

மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க கிருஷ்ணமூர்த்தி, நகரச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட விளையாட்டுத் துறை அமைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினர்.

முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.