டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா:மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா: உதயா பாலிகிளினிக் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் கூட்ரோடு – ம.பொடையூர் செல்லும் சாலையோரத்தில் செயல்பட்டு வரும் உதயா பாலிகிளினிக் ஆறாம் ஆண்டு துவக்க விழா மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. முகாமிற்கு உதயா பாலிகிளினிக் நிறுவனர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண் பார்வையை பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள் கண் பரிசோதனை மேற்கொண்டு, பார்வை குறைபாடுகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளை வழங்கினர். மேலும், மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அர்ச்சனா, முகாம் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி, செவிலியர்கள் விஜி, சீதா, தமிழரசி, சிவா உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று சேவையாற்றினர். மேலும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த இலவச மருத்துவ முகாம் சமூக நலன் சார்ந்த சிறப்பான முயற்சியாக பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.