ஆலத்தூர் வெள்ளாற்றில் மணல் திருட்டு முயற்சி முறியடிப்பு: மினி லாரி பறிமுதல் – தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், இராமநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் சட்டவிரோதமாக மணல் திருடப்படுவதாக இராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்று (07.06.2026) அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் இராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கடத்தும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் வருவதை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தங்களது வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு இருளைப் பயன்படுத்தி தப்பியோடினர். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து இராமநத்தம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பியோடியவர்களில் ஒருவர் வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (த/பெ. கலியமூர்த்தி) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்கும் வகையில் இராமநத்தம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.