ஆலங்குளம் அருகே கல் குவாரியில் விபத்து: இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி
தென்காசி, ஜூன் 2:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் ஏற்பட்ட கோர விபத்தில், இயந்திர ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருதம்புத்தூரில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் இன்று வழக்கம்போல் கற்களை உடைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது கீழப்பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (23), பொக்லைன் இயந்திரத்தை இயக்கி பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக குவாரியில் இருந்த பெரிய பாறை ஒன்று சரிந்து பொக்லைன் இயந்திரத்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இயந்திரம் கடுமையாக சேதமடைந்ததுடன், அதன் உள்ளே இருந்த இசக்கிராஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த ஆலங்குளம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? குவாரி நிர்வாகத்தின் அலட்சியம் ஏதேனும் இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இளம் வயதிலேயே தொழில் விபத்தில் உயிரிழந்த இசக்கிராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் மருதம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






