வீரவநல்லூர்  அரசு கால்நடை மருத்துவமனைக்குள் தேங்கும் கழிவுநீர் – கால்நடைகள், பொதுமக்கள் அவதி

நெல்லை மாவட்டம்:வீரவநல்லூர்,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்திற்குள் பேரூராட்சியின் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வெளியேறும் நீர் புகுந்து தேங்கி நிற்பதால், மருத்துவமனைக்கு வரும் கால்நடைகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தின் பல பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

மேலும், தேங்கியுள்ள நீரால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக்கேடு நிலவி வருவதுடன், கொசுக்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழைக்காலங்களில் இந்த பிரச்சினை மேலும் மோசமடைந்து, மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவமனை சார்பில் வீரவநல்லூர் பேரூராட்சிக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் புகும் நீரை தடுத்து, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிரமமின்றி மருத்துவ சேவையை பெற வழிவகை செய்ய வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.