இடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றம்: விசிக தலையீட்டால் இறந்தவரின் உடல் தகனம்
வாழப்பாடி அருகே சுமூக தீர்வு கண்ட விசிக நிர்வாகிகள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி குமாரபாளையம் கிராமத்தில் இடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பு காரணமாக முடங்கிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தலையீட்டின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இறந்தவரின் உடல் சுமூகமாக தகனம் செய்யப்பட்டது.
குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் முயன்றபோது மயானப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
தகவல் அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்காடு சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் பெ. வேல்முருகன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் வி.சி கண்ணன், ஸ்டீல் ராஜசேகர், கிருஷ்ணன் சிவக்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தர்மலிங்கம், மாயக்கண்ணன், முருகேசன், ஜெய்பீம் சுரேஷ், குமாரபாளையம் குமார், ஜெயசீலன், ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி உடலை எடுத்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
விசிக நிர்வாகிகளின் தொடர் முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இறந்தவரின் உடல் மரியாதையுடன் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவிதமும் இன்றி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
இக்கட்டான சூழலில் துரிதமாக செயல்பட்டு தீர்வு கண்ட விசிக நிர்வாகிகளுக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.






