சென்னை: காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த முதல்வர் விஜய், அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக டென்ஷனானார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகளின் சால்வைகளை வாங்க மறுத்தார். அதையும் மீறி சால்வை அணிவிக்க முயன்றதால் அந்த சால்வைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் விஜய் தொடர்ந்து சந்தித்து வருகிறார். சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு நேற்று விஜய் சென்றார். கட்சி தலைவர் காதர் மொகிதீனிடம் வாழ்த்து பெற்றார். பின்னர், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதல்வர் விஜய் நேற்று நேரில் சென்றார்.
அவரை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். காமராஜர் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரங்கத்தில் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாழ்த்து பெறும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே ஏராளமான காங்கிரசார் வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்த போது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமான காங்கிரசார் உள்ளே நுழைந்தனர்.
இந்த சூழ்நிலையில், முதல்வர் விஜய் அரங்கத்துக்குள் வருவதற்குள் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது, அரங்க மேடை வரை தொடர்ந்தது. காங்கிரசார் முண்டியடித்து மேடைக்கு செல்ல முயன்றதால் அரங்கத்தின் கதவையும் அடைக்க முடியாமல் போலீசார் போராடினர். ஆனாலும் அங்கு நடந்த தள்ளுமுள்ளுவால் ஒரு கட்டத்தில் விஜய் மேடையில் நிற்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் சால்வை அணிவிக்கவும் புகைப்படம் எடுக்கவும் காங்கிரசார் முண்டியடித்ததால் என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். இதனால் டென்ஷனான முதல்வர் விஜய், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அளித்த சால்வையை வாங்கவில்லை. அதோடு மற்றவர்கள் அணிவிக்க முயன்ற சால்வைகளையும் தூக்கி வீசினார். ஒரு கட்டத்தில் நிலைமை விபரீதமாக சென்றதால் அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக புறப்படச் செய்தனர்.
ஏற்கனவே, 2 நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி வந்த போதும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. டென்ஷனான அவர் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டு அரங்கத்தில் அமர்ந்திருந்த கட்சியினரை சந்திக்காமல் சென்றது விவாதத்துக்குள்ளானது. இப்போது முதல்வர் விஜய் வருகையின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நடந்தது சர்ச்சையாகி உள்ளது.






