தொடர் தோல்வி: அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்டுக.. எடப்பாடிக்கு எஸ்பி வேலுமணி கோஷ்டி நெருக்கடி!

சட்டசபை, மக்களவை தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் கட்சிப் பொதுக்குழுவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனே கூட்டணி வேண்டும் என்று அதிருப்தி அணியின் தலைவர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையில் இன்று மே 12-ந் தேதி செய்தியாளர்களிடம் சிவி சண்முகம் கூறியதாவது: சட்டமன்றத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற குழுவினுடைய தலைவராக எங்களுடைய கட்சியினுடைய தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சட்டமன்ற கொறடாவாக டாக்டர் சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். துணைத் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் ஹரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
|
முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் நேற்று நாங்கள் கடிதம் கொடுத்திருக்கிறோம். இது எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினருடைய பெரும்பான்மை முடிவெடுத்த முடிவு. அதை அதுமட்டுமல்ல இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் – நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல தொடர்ந்து பல்வேறு தேர்தல்களை நாங்கள் தோல்வியைச் சந்தித்து வருகிறோம்.

இதுல யார் மேலேயும் தனிப்பட்ட குற்றச்சாட்டு இல்லை. இந்த தோல்வியை நாங்கள் எல்லோருமாக நாங்கள் பொறுப்பாகத்தான் ஏற்றுக் கொள்கிறோம். அவர் குறை இவர் குறை என்று சொல்லவில்லை. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அனைவரும் சேர்ந்து இந்தத் தோல்வியை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இப்போது எங்களுடைய கடமை எங்களுடைய கவலை எல்லாம் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், அம்மா அவர்களால் கட்டிக்காப்பாற்றப்பட்ட இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும், இதை நம்பியிருக்கிற கோடிக்கணக்கான தொண்டர்களை காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலே ஏன் தோற்றோம்? எதற்காக தோற்றோம்? என்ன காரணம்? என்பதை ஆராய வேண்டும், கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.