சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக, சிபிஐ(எம்), சிபிஐ கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மேலும், பெரும்பான்மை பெற்ற கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பிஜேபி கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டது. அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
பிஜேபி 27 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து பிஜேபியைத் தமிழக மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. அதிகப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மை பெற்ற கட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அறிவித்தால்தான் நாங்கள் எங்களுடைய முடிவைச் சொல்லுவோம். இந்தத் தேர்தல் முடிவு எதிர்பாராத ஒன்று. அரசியல் கட்சிகள் தோற்கலாம், வெற்றி பெறலாம், ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது. அந்த வகையில் பிஜேபி தோற்றது. தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.
அதிமுக முதுகில் ஏறி இங்கே வர வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். அதற்கு தமிழ்நாடு ஒரு போதும் இடம் கொடுக்காது எனத் திமுக தலைமையிலான கூட்டணி செயல்திட்டங்களை வரையறுத்து களம் இறங்கினோம். அதிமுக-பிஜேபி கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டோம். அதில் 100 சதவீதம் வெற்றி பெற்றோம். தவெகவுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. எங்கள் இலக்கு பிஜேபி-அதிமுக கூட்டணி வலுவடைந்துவிடக் கூடாது என்பதாக இருந்தது. அதற்கேற்பத் தமிழக மக்கள் வாக்கு அளித்துள்ளனர். எங்களுக்கு வந்து சேர வேண்டிய பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் சிதறியுள்ளன. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் அவர்கள் பக்கம் சென்றுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






