சென்னை: தனி மெஜாரிட்டி கிடைக்காத தவெக சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க திட்டமிட்டு வருகிறது. இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வெற்றிபெற்றவர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அனைவரையும் மாமல்லபுரம் விடுதிக்கு வர கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஆட்சி அமைக்கத் தேவையானவை குறித்து விவாதிக்கவுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும், விஜய் வெற்றிபெற்றதை தொடர்ந்து நேற்று மாலை அடையாறில் உள்ள அவரது தந்தை மற்றும் தாயிடம் வாழ்த்துப்பெற்றார். அவரது தந்தை சந்திரசேகர் விஜய்யை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்க்குச் சென்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அப்போது, தவெக ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
* காங்கிரசிடம் ஆதரவு கேட்ட விஜய்
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அதிகமான தொகுதிகளைப் பெற்றுள்ளதால் அவர்கள் ஆட்சியமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவுக்காகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். அந்தவகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் விஜய் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
* விஜய்யை சந்திக்காத அரசு அதிகாரிகள்
மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகமாவே உள்ளது. ஆனால், தற்போதுவரை எந்த ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியும் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக எந்தக் கட்சியாவது ஆட்சியமைக்கும் சூழல் உண்டானால் அரசு அதிகாரிகள் முதல்வர் வேட்பாளரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






