திமுகவில் இணைந்தார் அஜிதா: தவெகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என குற்றச்சாட்டு

தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். இவர் தவெகவில் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் எதிர்ப்பார்த்திருந்த அவருக்கு விஜய் அல்வா கொடுத்துவிட்ட்டார். இதனால், பனையூருக்கு சென்று நடிகர் விஜயின் காரை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க முயன்றார். ஆனால், அவர் விஜய் காரை நிறுத்தாமல் அவர் மீது மோதுவதுபோல் நிற்காமல் சென்றுவிட்டார்.

தொடர்ந்து, அஜிதா தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு பின்னரும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர், அங்கிருந்து தூத்துக்குடி திரும்பினார். எனினும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் தவெக வேட்பாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நேற்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பியை சந்தித்து, தனது ஆதரவாளர்களான 150க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் திமுகவில் இணைந்தார். அவருக்கு கனிமொழி எம்பி சால்வை அணிவித்து வாழ்த்தினார். பின்னர் அஜிதா ஆக்னல் கூறுகையில், ‘‘நான் இன்று முதல் தவெகவில் இருந்து என்னை விலக்கி கொண்டு திமுகவில் இணைந்து உள்ளேன். தவெகவில் பெண்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக தவெகவில் தீவிரமாக பணியாற்றியும் அவமதிக்கப்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளேன்’’ என்றார்.