தூத்துக்குடி: ஒரு சிறிய அலட்சியம் ஒரு மாணவியின் உயிரைப் பறித்ததோடு, அவரது இறுதிப் பயணத்தையும் இவ்வளவு துயரமாக மாற்றியது தூத்துக்குடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த எதிர்பராத சம்பவத்தில் இருந்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர், அந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் மீளவில்லை..!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் செல்வகுமார்.. இவர் ரெடிமேட் பின்னலாடைத் தொழில் செய்து வருகிறார்..
இவருக்கு ஜோதி என்ற மனைவியும், செல்வசுஹாசினி (16) என்ற மகளும் உள்ளனர்.. செல்வசுஹாசினி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.. தூத்துக்குடி மாணவி செல்வகுமாரின் குடும்பத்தினர் தங்களது வீட்டில் ஒரு நாயைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தனர்..
அந்த நாயுடன் மாணவி செல்வசுஹாசினி எப்போதும் மிகவும் பாசமாக விளையாடுவது வழக்கமாம். அப்படித்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் அந்த நாயுடன் செல்வசுஹாசினி விளையாடிக் கொண்டிருந்தார்..
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாயின் நகம் பட்டதில் மாணவிக்குக் காயம் அல்லது கீறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.. நாய் கடித்த அல்லது கீறல் ஏற்பட்ட உடனேயே டாக்டரிடம் போகாமல் இருந்துள்ளார் செல்வசுஹாசினி.. அதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறாமலும் இருந்துள்ளார்.. முக்கியமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலும் மாணவி இருந்துள்ளார்.. ஆனால் நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது.
ரேபிஸ் ஊசி போட மறுத்து.. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரணக் காயம் என்று கருதியதால், அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.. இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி செல்வசுஹாசினிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்..
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நாய் கடித்ததன் மூலம் விஷம் (Rabies) உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர்.. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.. அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, செல்வசுஹாசினி பரிதாபமாக உயிரிழந்தார்..
மாணவியின் மரணத்தால் நிலைகுலைந்த பெற்றோர், அந்த அதிர்ச்சியில் உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.. இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தத்தனேரி மயானத்தில் மாணவியின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது இந்தச் சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஒரு பள்ளி மாணவி வளர்ப்பு நாய் கடித்தே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.. பொதுவாக நாய் கடித்தவுடன் காயத்தின் தன்மையைப் பார்க்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
அலட்சியம் கூடாது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக இருந்தாலும், அவை கடிக்கும்போது அலட்சியம் காட்டாமல் முறையான சிகிச்சை பெறுவது எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.. தனது மகளை இழந்த செல்வகுமாரின் குடும்பம் தற்போது மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளது..
ஒரு சிறு கீறல் தானே என்று அலட்சியமாக இருந்ததால், ஒரு இளம் பிஞ்சு உயிர் பறிபோனது அனைவர் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது.. இந்தத் துயரச் சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களிலும் ரேபிஸ் விழிப்புணர்வு குறித்த பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன..






