தேர்தல் ஊடக கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி, மார்ச் 19:
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் ஊடக கண்காணிப்பு மையத்தில் இன்று தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர் திரு. நரேந்திர ஏசரி இ.வா.ப., பாளையங்கோட்டை தொகுதிக்கான செலவின பார்வையாளர் திரு. தீரஜ் குமார் ஜெய்ஸ்வால் இ.வா.ப., நாங்குநேரி மற்றும் இராதாபுரம் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர் திரு. வினோத்குமார் இ.வா.ப., ஆகியோர் இணைந்து மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மரு. இரா. சுகுமார் இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரசன்னா குமார் இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில், ஊடக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான ஊடக செய்திகள் கண்காணித்தல், செலவின விவரங்கள் பதிவு செய்தல், விதிமுறைகள் மீறல் சம்பவங்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் சீராக நடைபெற்று வருவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.