அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் 2026 ஆண்டின் முதல் கூட்டமானது நடைபெற்றது

ஜனவரி 26 2026 மாலை அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் 2026 ஆண்டின் முதல் கூட்டமானது நடைபெற்றது. சங்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணை மற்றும் பயணச்சீட்டு விலை அடங்கிய பதாகைகள் ரயில்வே நிலையத்திற்கு வழங்கப்பட்டன. இவற்றை ரயில் நிலைய அதிகாரி திரு கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் பயணிகள் நலன் தொடர்பான கோரிக்கைகள், தேவைகள் விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் சரவணன் சக்திவேல், செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் கோகுலசங்கர், துணைச் செயலாளர் ஆண்டனிஜெனோ, பொருளாளர் அப்துல் ஹமீது, நிர்வாகிகள் வீகேபுரம் கணேஷ் பெருமாள்சாமி, ஆறுமுகநயினார், சந்திரகாந்த், மாரியம்மாள், சட்டநாதன், கிருஷ்ணமூர்த்தி கௌரவ ஆலோசகர்களான பேராசிரியர் வேலாயுதம், சிராஜீதீன் மற்றும் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயற்றப்பட்ட தென்னக இரயில்வேவுக்கான கோரிக்கைகள் / தீர்மானங்கள் பின்வருவன:

1. தினசரி காலை செங்கோட்டை – நெல்லை (56774) மாலை நெல்லை – செங்கோட்டை (56775) ஆகிய ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வண்ணம் 18 பெட்டிகளை உடனடியாக இணைக்க வேண்டும்,

2. மதுரைக்கு அடுத்தபடியாக அம்பை ரயில் நிலையத்தில்தான் சுமார் 7000+ சீசன் டிக்கெட்டுகள் உள்ளன, காலையில் மட்டும் 1000 முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் விற்பனையாகிறது. இவைகளை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்கேற்ப அம்பை இரயில் நிலையத்திலிருக்கும் கமர்சியல் முன்பதிவு கவுண்ட்டருக்கு கூடுதலாக இரண்டு பணியாளர்களை உடனே நியமிக்கும்படி வேண்டுகிறோம்,

3. அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் மற்றும் ஆம்பூர் ரயில்வே கேட்கள் தினசரி 16 முறை, 30 நிமிடங்களுக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் பணிக்குச் செல்வோர், ஆபத்தான நிலையில் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்கள் கேட்டை கடக்க மிகவும் காலதாமதம் ஆவதால் வாகனங்கள் செல்ல ஏதுவாக தேவையான சிக்னல்கள் அமைத்தோ அல்லது அய்யனார்குளம் கிராசிங்.ல் போடப்பட்டு இருப்பதைப்போல் சுரங்கப்பாதையோ உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும்,

4. சேரன்மகாதேவி மேம்பால பணிகள் முடிவு பெற்றும் ரயில்வே துறை தரப்பில் பணிகள் நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், இதற்கு தேவையான நடவடிக்கை உடனே எடுத்து சேரன்மகாதேவி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வழிவகை உடனடியாக செய்ய வேண்டும்,

5. கொல்லம் – புனலூர் MEMU ரயில்களை (16729, 66318) திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். அல்லது ஏற்கனவே ஓடிய நெல்லை – கொல்லம் பேசஞ்சர் ரயிலை ஒரு நாளைக்கு இருவேளை (காலை, மாலை) இயக்க வேண்டும்,

6. செங்கோட்டை தாம்பரம் வாரம் மும்முறை செல்லும் அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் மற்றும் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு நேர்வழியில் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக வாராந்திர விரைவு ரயில் அறிமுகப்படுத்த வேண்டும்,

7. நெல்லை & அம்பை மார்க்கத்தில் உள்ள பயணிகள் அதிகம் பயன்படுத்தி வந்த 56743 ரயில் (1.40 பழைய நேரம்) மதியம் 2.40 க்கு நெல்லையிலிருந்து தற்போது கிளம்புவதால், தென்காசி – மதுரை 16328 (மதியம் 3.45) தினசரி விரைவு ரயிலுக்கான இணைப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் பயணிகள் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது, ஆகவே 56743 ரயிலை மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பும்படி கோருகிறோம்.

8. அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை வெகு சீக்கிரம் முடித்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி வேண்டுகிறோம், மேலும் 1-வது நடைமேடை நீட்டிப்பு பணிகள் துவங்காத நிலையில் உள்ளது அதையும் விரைவில் முடித்து தரும்படி வேண்டுகிறோம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணைச் செயலாளர் ஆண்டனி ஜெனோ நன்றி தெரிவித்தார்.