வங்கி கணக்கில் தவறுதலாக சென்று சேர்ந்த ரூ.10,000 நாங்க போட்ட ‘ஓட்டை’ திருப்பிக் கொடுங்கள்! தேர்தல் முடிந்த நிலையில் பீகார் மக்கள் போர்க்கொடி

தர்பங்கா: பீகாரில் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை திருப்பித் தரக் கோரிய அதிகாரிகளிடம், நாங்கள் அளித்த வாக்கை திருப்பிக் கொடுங்கள் என்று கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, வாக்குகளைக் கவரும் வகையில் ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.40 கோடிப் பெண்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இத்திட்டத்திற்குத் தகுதியற்ற பல ஆண்களின் வங்கிக் கணக்கிலும் இந்தத் தொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், வங்கிக் கணக்கு ஆய்வின் போது இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தர்பங்கா மாவட்டம் ஜலே தொகுதியில் உள்ள அகியாரி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பலருக்கும் பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு ‘ஜீவிகா’ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக அந்தப் பணத்தை ஏற்கனவே செலவழித்துவிட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில், ‘எங்களது வாக்கை (ஓட்டு) திருப்பிக் கொடுங்கள், நாங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறோம்; எங்களுக்கு ஓட்டுக்காகத்தான் உதவித்தொகை வந்தது என்று நினைத்தோம்’ என்று அதிரடியாகத் தெரிவித்தனர். மேலும், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது பணத்தைக் கொடுத்துவிட்டு, தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு இப்போது கேட்பது ஏன்?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.